புதுடெல்லி: 
நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,   மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அவ்வகையில் 81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் ஓடும் நாக நதியைக் குறிப்பிட்டு பிரதமர் பேசினார்.
‘திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ‘நாக நதி’ சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது என்று பாராட்டிப் பேசினார்.
தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.