சென்னை:

மிழகத்தில் நடைபெற உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும்  இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதுபோல 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுடன்,  18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ந்தேதி தொடங்கி  26ந்தேதி முடிவடைந்தது. 27ந்தேதி வேட்புமனு பரிசீலனை, அதையடுத்து இன்று (28ந்தேதி) வேட்புமனு திரும்பபெறுதல் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் 1587 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், பலர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, தற்போது இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து மொத்த வேட்பாளர்களாக 845 பேர் போட்டியிடுவதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இவர்களில் 779 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள், ஒரே ஒருவர் அரவாணி.

அதிக பட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில், 42 வேட்பாளர்களும், தென் சென்னை தொகுதி யில், 40 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் மட்டும் களமிறங்குகின்றனர்.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 57 பேரும், மாநில அளவிலான அங்கீகரிக் கப்பட்ட கட்சிகளின் சார்பில் 55 பேரும், பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளின் சார்பில் 174 பேரும், சுயேட்சை வேட்பாளர்களாக 559 பேரும், மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும், இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 514 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 305 பேரில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 209 பேரில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஏற்கப்பட்ட மனுக்களில், 36 பேர், தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில், 269 பேர், இடைத்தேர்தலில் போட்டி யிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 269 பேரில், 241 பேர் ஆண் வேட்பாளர்களும், 28 பெண் வேட்பாளர்களும் ஆவர்..

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் சார்பில் 36 பேரும், பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளின் சார்பில் 46 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 187 பேரும் என மொத்தம் 269 பேர் இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.

இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.