நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி வழங்கமுடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் சமீபத்தில் பேசிய விவகாரத்தை திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், “பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது.

தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்” என்று பேசினார்.

இதனால், திமுக உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நாடாளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியதில்லை, தமிழ்நாடு எம்.பி.க்களையும், தமிழ்நாடு மக்களையும் நாகரீகமற்றவர்கள் என அமைச்சர் கூறியது புண்படுத்துகிறது. ஆகவே மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடியதும், திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. தெரிவித்தார்.

ஏற்கனவே கோவை பொதுக்கூட்டத்தில் தமிழக அரசு தேசவிரோத அரசு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில் தற்போது அவரது அமைச்சரவை சகா ஒருவர் நாடாளுமன்றத்திலேயே தமிழ்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயகத்தை விமர்சித்து பேசியிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.