சென்னை:
தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு நேற்று சென்னை திரும்பி வந்த நிலையில், இன்று திடீரென ஆந்திரா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டும் கோடை காலத்தின்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணா நீர் கால்வாயில் தொடர்ந்து கூடுதலா தண்ணீர் விடுவது தொடர்பாக ஆந்திர முதல் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை இரு அமைச்சர்களும், சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடாவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர முதல்வருடனான பேச்சுவார்த்தையின்போது கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை திறக்க வலியுறுத்தப்படும் என்றும், கிருஷ்ணா, கோதாவரி, காவேரி நதிகள் இணைப்பு குறித்தும் பேச்சு நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
முன்னதாக டெல்லி சென்ற அமைச்சர்கள் இருவரும் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் மற்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.