சண்டிகர்:
சண்டிகர் அரசு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த மாணவன் கிருஷ்ணபிரசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்டிகரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்த கிருஷ்ண பிரசாத். தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வடமாநில கல்லூரிகளில் படித்து வரும் தமிழக மாணவர்கள் இதுபோன்று தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது கிருஷ்ணபிரசாத் தற்கொலை செய்து கொண்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை நிர்வாகம் அதிக நேரம் பணி செய்ய வலியுறுத்துவதாலேயே அங்கு இத்தகைய மரணங்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சண்டிகருக்குச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூறிய அவரது உறவினர்கள், கிருஷ்ணபிரசாத் ’10-ம் வகுப்பு வரை ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்ததாகவும், தான் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்த அவர், பிளஸ்-1, பிளஸ்-2 சேலம் அருகே உள்ள ராசிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து, மருத்துவம் படிக்க தேர்வான தாகவும் கூறினர்.
சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த அவர், மருத்துவ மேல் படிப்புக்காக சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்தார் என்றும் கூறினர்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியது நம்பும்படி இல்லை என்றும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள்விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சண்டிகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கிருஷ்ண பிரசாத்தின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதாகவும், அதைத்தொடர்ந்து அவரது உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான், கிருஷ்ணபிரசாத்தின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.