சென்னை:

கடந்த இரண்டு மாதங்களில் 20 வேலை நாட்களை இழந்து தொழில் துறை ரூ. 80 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அகில இந்திய உற்பத்தி அமைப்புகளின் தேசிய செயலாளர் ரகுநாதன் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவு முதல் வர்தா புயல், பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், வறட்சி போன்ற காரணங்களால் தமிழக தொழில் துறை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் தாக்கம் வரும மார்ச் மாதத்தில் தான் மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் தெரியவரும்.
தமிழகத்தில் ஒரு வேலை தினத்தை இழந்தால், தொழில் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் மட்டும் குறைந்தபட்சம் 10 நாட்கள் தொழில் பாதித்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பின் தாக்கம் இன்னும் தொழில் துறையை முடக்கி போட்டுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் முதல்வர் பன்னீர் செல்வம் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய கொள்கையை வகுக்க வேண்டும். இதை உடனடியாக செய்யவில்லை என்றால் குறுகிய கால மற்றும் நீணட கால முதலீடுகளை இழக்க நேரிடும். சினிமா வெளியீடு கூட தமிழகத்தில் தாமதமாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதில் முக்கிய பொறுப்பு வகித்த ஒரு அதிகாரி கூறுகையில், கடந்த டிசம்பர் முதல் பல எதிர்பாராத சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது தமிழகம்.

இந்த நிலையை மேம்படுத்த செப்டம்பரில் அடுத்த முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். வற்டசி மற்றும் வர்தா புயல் தாக்குதலால் தமிழகத்துக்கு ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசிடம் இருந்து உடனடி நிவாரணத்தை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது விரைந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.