சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். இந்த கூட்டத்தொடரில பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்றது. அது இந்த ஆண்டின் முதல் பேரவைக் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தினார். அப்போது அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், சில நிமிடங்களிலேயே ஆளுநர் தனது உரையை முடித்துக் கொண்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்குப் பின்னர் மானிய கோரிக்கைகள் துறை ரீதியாக நடத்தப்பட வேண்டும். ஆனால், அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட இருந்ததால், மக்களவை தேர்தல் முடிந்த பின்னர், இக்கூட்டத்தொடரை நடத்திக்கொள்ளலாம் என பேரவை கூட்டத்தொடர் மாநில கோரிகைகள் குறித்து விவாதிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது மக்களவைத் தேர்தல் முடிவடைந்து தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் சட்டப்பேரவையை கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரவை தலைவர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது என்றார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நடைபெறும் என்பது குறித்து, ஜூன் 24-ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.