சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு (2021) மே மாதம் 11ந்தேதி கூடியது. 10ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற திமுக சட்டப்பேரவையை அமைத்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டபேரவை கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 7 முறை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 8-வது கூட்டத் தொடர் 2022ம் ஆண்டு ஜனவரி 5ந்தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், புத்தாண்டு கூட்டத்தொடர் மீண்டும் கோட்டையில் உள்ள சட்டமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான கணினி உள்பட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநில அரசு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், ஜனவரி 5ந்தேதி தொடங்க உள்ள புத்தாண்டு கூட்டத்தொடரானது சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சட்டமன்ற பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரானது ஜனவரி 5ஆம் தேதி ளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கில் நடைபெறும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.