கோவளம்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என தென்மண்டல கவுன்சின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஸ்டாலின் கூறினார். மேலும், ஜிஎஸ்டி, நீட், மின்வாரிய திட்டம் குறித்தும் தமிழகத்தின் அதிருப்தியை எடுத்துரைத்தார்.

கேரளாவில் நடைபெறும் தென்மண்டல கவுன்சிலின் முப்பதாவது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  நேற்று மாலை திருவனந்தபுரம் சென்றார். கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோவளத்தில் சந்தித்து, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.

அப்போது, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர்  ஸ்டாலின் கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் சந்தித்தபோது, அவருக்கு The Dravidian Model என்ற புத்தகம் வழங்கினார். தொடர்ந்து கேரள உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில், கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி  ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதையடுதுது  இன்று கேரள மாநிலம் கோவளத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித்ஷா  தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த 30ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில்   தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், மின்வாரிய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு காற்றாலை மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை ஒன்றிய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தென்னிந்திய முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற உணர்வோடு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்திட வேண்டும்.

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு  ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், பாதுகாப்பை உறுதி செய்ய தென்மாநிலங்களுடன் மத்திய உளவுத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர், அடுத்த தென்மண்ட கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த கூட்டத்தில் கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களும் கலந்துகொண்டனர். தெலுங்கான சார்பில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். மேலும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.