சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து   சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, தமிழக காவல்துறையில் உள்ள உளவுத்துறை செயலிழந்து விட்டது என கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில்   ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கவர்னரை சந்தித்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் மனு அளித்தனர். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.

பின்னர் கவர்னர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரினோம். ஆனால், தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுத்து வருகிறத. கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அங்குள்ள அரசு அலுவலகங்கள் நிறைந்த மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுபோல, கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு மருத்துவமனையில் முதலில் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.  பின்னர் பிரச்சினை பெரிதான பிறகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது. இந்த கொடூரமான கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு திமுக அரசே காரணம் என்றவர்,  ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும்,  தற்போது நடைபெறும் கள்ளச்சாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம் என்றவர், இதுதொடர்பாக  வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச வாய்ப்பு இல்லை என்றார்.

போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது ஏற்கனவே மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை.   அதனால் தற்போது, தமிழ்நாடு அரசு கண்துடைப்புக்காக  ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம்  மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காவல்துறையின்  உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்றும்,  இந்த வழக்கு மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று வலியுறுத்தியவர், இந்த  சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், எனக்கு எதிரான வழக்கில், ஆர்.எஸ். பாரதியை  சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தான் உசச்சநீதிமன்றம் சென்றேன் என்று கூறியவர், கடந்த  அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது?  என கேள்வி எழுப்பினார்.