சென்னை:

கால்நடை வளர்ப்பு திட்டத்திற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி பசுக்களை மத்திய அரசு மூலம் தமிழக அரசு இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தார் விமானம் மூலம் சென்னை விமானநிலையம் கொண்டு வரப்பட்ட இந்த பசுக்கள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய கால்நடை பராமரிப்பு துறை மூலம் இந்த பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுக்கு 500 பசுக்களும், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 540 பசுக்கள் சென்னைக்கு வந்துள்ளது. பண்ணைகளுக்கு வழக்கமாக வெளிநாடுகளில் இருந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், தற்போது ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகமே எழுச்சியுடன் போராடி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் நமது பாரம்பரிய மிக்க பால் மாடுகளை அழிக்கும் நோக்கத்தில் பீட்டா அமைப்பு மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
சமூக வளைதளங்களில் இது போன்ற செய்திகள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக தான் இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். இந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்த ஜெர்சி ரக பசுக்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.