சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பருவ நிலை மாற்றம் உலக நாடுகளிடையே பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள், வெப்பஅலை காரணமாக உடல்நலக் குறைவுகள், உயிரிழப்பு, உணவுப்பற்றாக்குறை என பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  கடல் மீன்வளம் குறைவதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.500 கோடியில் தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.150 கோடியில்தமிழகத்தில் 100 சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் தொடங்கப்படும்” என்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் உரையில்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து  தமிழ்நாடுபசுமை பருவநிலை நிறுவனத்தை தொடங்க அனுமதி கோரி, சுற்றுச்சூழல், வனத் துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதை ஏற்று  `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்’ தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ”தற்போது தமிழகத்தின் மொத்த நிலப் பரப்பில் 23.27 சதவீதமாக உள்ள பசுமைப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த திட்ட மிடப்பட்டு உள்ளது.  ரூ.5 கோடியில், நிதித் துறை ஒப்புதலுடன்தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தை தொடங்க தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்துள்ளது.