சென்னை: தமிழ்நாடு அரசின் இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுத் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்றி உள்ளது. அதன்படி, இந்த மாதம் நடைபெற இருந்த தேர்வு அடுத்த மாதம் (ஜுலை) 21ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் கல்விச்சாலைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு, பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில்,  தமிழ், உருது, தெலுங்கு,கன்னடா, மலையாளம் ஆகிய மொழி பாடல்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,  தேர்வு எழுதும் அனைவரும் தமிழ் மொழி தேர்வில் தகுதி பெற வேண்டும். தமிழ் தகுதி தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்தத்தாள் திருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  போட்டி எழுத்துத் தேர்வில் பகுதி ஒன்றில் தமிழ் மொழி தாள் தேர்வில் 50 மதிப்பெண்கள் கேட்கப்படும். அதில் தேர்வர்கள் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா,உருது, ஆங்கிலம்,கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.

போட்டி தேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தேர்வர்களுக்கு தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2024ம் ஆண்டிற்கான SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும்,   இதில் தேர்ச்சி பெற்றால் நேர்காணல் நடத்தி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தே ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அதன்படி, தேர்வுக்கு தகுதியுள்ள 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக  ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு காரணமாக, தேர்தலை தேதியை மாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் இந்தத் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று அமலுக்கு வந்துள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் போட்டித் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால் ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.