சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மீட்பு பணியில் ராணுவத்தினரும் களமிறங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளமான எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், #வயநாட்டில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான #கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு கூறி உள்ளார்.