சென்னை: தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் “தமிழரசு” மாத இதழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த இதழில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. இது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் சந்தாதாரக சேர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் “தமிழரசு” இதழ், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள், நலத்திட்ட செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அச்சு ஊடகமாக திகழ்ந்து வருகிறது. “தமிழரசு இதழ்” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த புத்தகத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சாதனைகளும் இதில் தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் ‘தமிழரசு’ இதழ் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இதழில், அரசின் பயனுள்ள பல தகவல்களை வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தமிழரசு இதழ் அளித்து வருகிறது. தமிழக ஆளுநர் அவர்களின் உரைத் தொகுப்புகள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், அனைத்துத் துறைகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அனைத்துத் துறைச் சார்ந்த அறிவிப்புகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விரிவான கட்டுரைகள், மாநிலம் முழுவதிலும் அரசு நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் நேர்காணல்கள் உள்ளிட்ட வெற்றிக்கதைகள் ஆகியவை அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயனடைந்திடும் வகையில் தமிழரசு இதழில் வெளியிடப்படுகின்றன
தமிழரசு தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களின் பிரதி விலை 20/- ரூபாயாகவும், ஆண்டு சந்தா ஒவ்வொன்றிற்கும் 240/- ரூபாயாகவும், ஆயுள் சந்தா தமிழ் (10 ஆண்டுகள்) 2,000 ரூபாயாகவும், ஆங்கிலம் (10 ஆண்டுகள்) 2,400 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு மாத இதழ்களை பெற்றுக்கொள்ள www.tamilarasu.org. இணையதளம் மூலமாக சந்தாதாரராகப் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு வெளியீடுகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆற்றிய தமிழ் மற்றும் ஆங்கில உரைகள் அடங்கிய சிறப்பு வெளியீடுகள் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இதரப் பிரிவுகளுக்குரிய விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் போன்றவையும் இங்கு அச்சிடப்படுகின்றன.
மடிப்பேடுகள்
அனைத்து மாவட்ட நினைவகங்களுக்குத் “தமிழரசு” சார்பில் கடந்த 2011ஆம் ஆண்டு மே திங்கள் தொடங்கி, நாளதுவரை பல்வேறு தலைவர்கள், தியாகிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக மடிப்பேடுகளாக அச்சடிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.