டெல்லி: தலைநகர் டெல்லி சென்றுள்ள மாநில ஆளுநர் ஆர்என். ரவி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஆளுநர் தரப்பு விளக்கம் கூறியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், அவரது பதவி நீட்டிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் செய்யப்படவில்லை. செய்யப்படவில்லை. ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவையில் பயங்கரவாதி அல்உம்மா அமைப்பு தலைவர் பாஷாவுக்கு நடைபெற்ற இறுதி ஊர்வலம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆளுநர் டெல்லியில் அலோசனை நடத்த 4 நாட்கள் பயணமாக டெல்லி பயணம் சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்றுள்ளனர்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஜனவரியில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தின்போது, ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ஆளுநர் உரை சலசலப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த முறை ஆளுநர் உரையாற்ற வருவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததாகவும், பிரதமரும் ஆளுநரும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.