சென்னை: ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம்  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

 தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக  தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.  இந்த இரண்டு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானங்களை இன்று முன்மொழிந்தார்.

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், “ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் தேர்தல் செலவுகளை குறைப்பது, தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது உள்பட 10 கோரிக்கைகள் மத்திய அரசிடம் அதிமுக வைத்துள்ளது. அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே ஆதரிப்போம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், “மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் சிறந்து செயல்பட்டுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்தில் உள்ள கவலைகள், அக்கறையை பாஜக புரிந்து கொள்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.