சென்னை: தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாதிரி பள்ளிகள் திறப்பு விழா இன்று வடசென்னை பகுதி ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 26 தகைசால் பள்ளிகள், 5 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதல்வர், தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் புதுமைப் பெண் திட்டம் என தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிகரான அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளித்தால் மட்டுமே இந்தியா வளர்ந்த நாடாக மாறும். அனைவருக்கும் இலவசமான, தரமான கல்வி கிடைக்கப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
நமது நாட்டில், திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தபோது பள்ளிகளை பார்வையிட வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார். ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு கூறினார்.