சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயிலுக்கு தமிழக அரசு மானியம் 2 மடங்கு உயர்த்தி அறிவித்து உள்ளது. இதனால் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வெளிச்சந்தையில் பருப்பு, பாமாயில் உள்பட உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ரேசன் கடைகளில், பருப்பு பாமாயிலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனால், போதுமான அளவு விநியோகம் செய்யப்படுவதில்லை என்பதால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தற்போது  வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது.

தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும் , பாமாயில் ரூ. 25-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரேஷனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்கலாமா என்று ஆலோசனை செய்யப்படுவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு, பாமாயில் போன்ற தானியங்களின் விலை சில மாதங்களில் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.