சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள  உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை  உயர்நீதி மன்றம் உத்தர விட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களின் பெயர்கள், அதை உருவாக்கியவர்களின் பெயரில் இயங்கி வருகிறது. அப்போதைய காலக்கட்டத்தில் ஒருவர் பற்றிய குறிப்பு, அவருடைய பெயருடன் அவரது சாதி மத அடையாளங்களும்  சேர்ந்தே இடம்பெற்றிருக்கும்.   ஆனால், தற்போது அதைக்கொண்டு அரசியல் மற்றும் சர்ச்சைகள் ஏற்படுவதால், பள்ளி பெயர்களில்  உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை மார்ச் மாதம்   விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி பரத சக்ரவர்த்தி, சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களைச் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்பது குறித்தும், பள்ளிக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மேலும், சாதி சங்கங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என பாடம் நடத்துவது வேதனையாக  இருப்பதாக தெரிவித்த நிலையில்,   பள்ளி, கல்லூரிகளின்  பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும், சாதிப் பெயர்களை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆகியவற்றின் பெயரை அரசுப் பள்ளி என்று மாற்றவும் உத்தரவு.

“சங்கங்கள் பெயரில் சாதி கூடாது”   என்று கூறியுள்ள நீதிபதி,  சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்றும்,  ஏற்கெனவே உள்ள சங்கங்கள், சாதிப் பெயரை நீக்கி திருத்தம் செய்வேண்டும். இல்லையெனில் அவற்றை சட்டவிரோதமானவை என அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பள்ளி பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க முடியுமா? தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதி மன்றம்-..