சென்னை: சென்னையில் சில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. இது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடைய அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, மணலி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் , மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள சென்னையின் உள்பகுதிகள் உள்பட சில பகுதிகளுக்குள் சென்று மக்களை ஏற்றி வர சிற்றுந்து எனப்படும் மினி பேருந்துகளை அரசு இயக்கியது. இதற்கு பெரும் வரவேற்பு கிட்டியது. ஆனால், அடுத்த திமுக ஆட்சி இந்த பேருந்து இயக்கத்தை முடக்கியது. இதுதொடர்பாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் மட்டும் மீண்டும் மினி பேருந்துகளை இயக்கி வருகிறது.
இநத் நிலையில், தற்போது தனியார் சிற்றுந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக பேருந்து சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மினி பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு (2024) சாலை போக்குவரத்தில் மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்பின் புதிய மினி பஸ் திட்டம் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரி தரப்பில், 70 சதவிகிதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும், 30 சதவிகிதம் பேருந்து வசதியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் இந்த மினி பஸ் திட்டம் செயல்படுத்த மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையின் முக்கியப் பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் வசதிக்காக தனி மினி பஸ்களை இயக்க உள்ளது. இந்த தனியார் மினி பஸ் சேவை அடுத்த மாதம் முதல் சென்னையில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடும் நஷ்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திமுக அரசு மகளிருக்கு இலவச பேருந்து அறிவித்தன்மூலம் மேலும் பல நூறு கோடி இழப்பை சம்பாதித்து வருகிறது. இதனால், ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்க முடியாமல் அரசு தத்தளித்து வருகிறது.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு தனியார் பேருந்துகளை சென்னையில் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கப்படுகிறதோ என சந்தேகம் கிளப்பி உள்ளனர்.