சென்னை; பொங்கலையொட்டி நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது
இதையடுத்து நடப்பாடிணன் முதல் போட்டி நாளை தொடங்கும் நிலையில், பிரபலமான போட்டிகள் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. காளைகள் மீதான பாசமும், வீரத்தின் வௌிப்பாடக மட்டுமின்றி பொங்கல் கொண்டாட்டங்களின் அங்கமாகவும் தமிழ்நாடு மக்களால் ஜல்லிக்கட்டு போட்டிகள் கருதப்படுகின்றன. பல்வேறு சிக்கல்களை தாண்டி மீண்டும் உயர்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இதையடுத்து நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பல்வேறு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதன்படி, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, பொங்கல் பண்டிகை தொடங்கி மே மாதம் வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களி்ன் பாதுகாப்பு கருதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு பின்னர் போட்டிக்கான அனுமதியை அரசு வழங்கி வருகிறது.
கால்நடை பராமரிப்பு இயக்குனரின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்ட அதிகாரிகள், அமைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் போன்றோர் கண்டிப்பாக வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ குழு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது உடனிருந்து கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் காளைகளுக்குத் தேவையற்ற வலி அல்லது துன்பத்தை மாடுபிடி வீரர்கள் ஏற்படுத்தக் கூடாது எனவும் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் நடத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை எனவும், மீறி நடத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.jallikattu.tn.gov.in) விண்ணப்பிக்கவும், போட்டி தொடங்கும் தேதிக்கு முன்னரே அனைத்து ஏற்பாடுகளும் திடலில் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வழிக்காட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகழாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை தொடங்குகிறது. தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அலங்காநல்லூரில் ஜனவரி 16ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இன்று ஜல்லிகட்டு மைதானத்தில் பந்தக்கால் நடப்பட்டது.
தமிழ்நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதிகளான மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 14ந்தேதியும் (பொங்கல் அன்று), அடுத்த நாளான ஜனவரி 15ந்தேதி அன்று பாலமேட்டிலும், ஜனவரி 16ந்தேதி அன்று அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது