சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்துக்கு “பள்ளியின் அலட்சியப்போக்கே காரணம்”  என்று குற்றம் சாட்டியுள்ள தனியார் பள்ளி இயக்குநரகம். அதுகுறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்கள், பேருந்துகளில், டிரைவர் மற்றும் கிளினர் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவு  உள்ள நிலையில், அதை  கடைபிடிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி  உள்ளது.

கடலூர்  செம்மங்குப்பம் பகுதியில்  தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது, மயிலாடுதுறை நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3  சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கேட் கீப்பர் கேட் அடைப்பது தொடர்பான பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் அந்த வழியாக வருவது, வழக்கமாக அந்த வழியில் பள்ளி வேனை இயக்கும் டிரைவருக்கு தெரிந்திருக்கும். மேலும் ரயில் வரும் அதன் சத்தம்  சுமார் ஒரு பர்லாங் தூரம் வரை கேட்கும். அப்படி இருக்கும்போது,  டிரைவர் எப்படி, கேட்டை கடந்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில், கேட்கீப்பரின் தகவலும் முரண்பாடாக உள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக  விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளி இயக்குநரகம் சார்பில்,   கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது,

“எஸ். குமாரபுரத்தில் செயல்பட்டு வரும் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி வாகனம் 8.7.2025 அன்று விபத்தில் சிக்கியது குறித்து ஆய்வு செய்ததில் கீழ்க்கண்ட குறை இருந்தது தெரியவருகிறது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கான கூட்டத்தில் பாதுகாப்பு உதவியாளர் இல்லாமல் பள்ளி வாகனத்தை இயக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்கள் மற்றும் கட்டுப்படுத்துதல்) சிறப்பு விதிகள் -2012இல் பிரிவு 5(6) -ன்படி மாணவ மாணவியர்களுக்கு இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டயமாக உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் மேற்கண்ட பள்ளியின் IN 10 AT 1281 வாகனமானது ஓட்டுநர் சங்கரால் பாதுகாப்பு உதவியாளர் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவருகிறது. ஆகவே, விபத்திற்கு பள்ளியின் அலட்சியப்போக்கே காரணம் என தெரியவருகிறது. இதற்கான விளக்கத்தினை பள்ளியின் முதல்வர், தாளாளர் அளிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், கட்டாயம் உதவியாளரை கொண்டு இயக்க வேண்டும், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை பொருத்த வேண்டும், பள்ளி வாகனங்களை பழுது பார்த்து சரியாக இயக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தனியார் பள்ளி இயக்குநரகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பள்ளி வாகனத்தை இயக்குதலில் ஏற்பட்ட அலட்சியமே விபத்துக்கு காரணம் என தனியார் பள்ளி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது சிபிஎஸ்இ பள்ளி என்பதால் பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூட தனியார் பள்ளி இயக்குநரகம் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.