சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் பாம்புகளை பிடிக்க தமிழ்நாடு அரசு நாகம் என்ற பெயரில் மொபைல் செயலியை (Mobile App) அறிமுகப்படுத்தி உள்ளது.
உலக பாம்புகள் தினம் ஜுலை 16ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு நாகம் செயலியை வெளியிட்டார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., அவர்கள் உலக பாம்பு தினத்தை கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, NAAGAM செயலி வெளியிட்டு, மீட்பர் பயிற்சியை தொடங்கி வைத்தார்கள்.
வீடுகள், அலுவலகங்களில் பாம்பு புகுந்தால் அவற்றைப் பிடிக்க உதவும் ‘நாகம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சுப்ரியா சாஹு, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் பாம்புகளை வழிபடும் வழக்கம் உள்ளதாகக் குறிப்பிட்டார். “இயற்கை வனங்களில் பாம்புகளுக்கு முக்கியமான இடம் உள்ளது. நகர்ப்புறங்களில் பாம்பு குறித்த பயம், தவறான புரிதல் தற்போதும் நிலவுகிறது. ஆனால், கிராமங்களில் அவ்வாறு இல்லை.
“பாம்பு கடி என்பது, அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியலில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும்,” என்றார் சுப்ரியா சாஹு . இருளர் சமூகத்தினர் இந்தப் பணியை சிறப்பாக செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பாம்பு மீட்பு, விழிப்புணர்வுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து, பத்மஸ்ரீ விருது பெற்று பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாம்புகளை பார்த்தவுடன் புகார் அளித்து, உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யும் வகையில் நாகம் செயலி மூலம் புகாரின் பேரில் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறிவியல் முறையில் பாம்புகளை பிடித்து, அதற்கான வாழ்விடத்தில் விடுவர்.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் கேரள அரசு ‘சர்ப்பா’ என்றொரு செயலியை அறிமுகப்படுத்தியது. அதனையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் பாம்புக்கடியால் நேர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அங்கு 2019ஆம் ஆண்டு பாம்புக்கடியால் 123 பேர் மாண்டுபோன நிலையில், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 34ஆகக் குறைந்தது. இதுவரை 34,700க்கும் மேற்பட்டோர் ‘சர்ப்பா’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
