சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகஅரசு ஏப்ரல் 1ந்தேதி முதல் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. குறைந்த பட்சம் 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தமிழகஅரசு வாகன பதிவுக்கான கட்டணத்தையும் வெளியே தெரியாமல் பல மடங்கு உயர்த்தி உள்ளது தெரிய வந்துள்ளது. வாகன பதிவு சான்றிதழ் மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் 3 முதல் 10 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பதிய கட்டண விகிதத்தின்படி 15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்,. இதற்கு முன் புதுப்பிக்க ரூ.600 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ஆட்டோ போன்ற வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.2ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..
இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ல் இருந்து ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ஏற்கனவே மத்தியஅரசு சமையல் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு என்று அடுத்தடுத்து வரிகளை உயர்த்தி பொதுமக்களை சாகடித்து வரும் நிலையில், தமிழகஅரசும், தன் பங்குக்கு வரிகளை உயர்த்தி வருகிறது. கடந்த மாதம்தான் தமிழகஅரசு வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து பெருமைப்பட்டுக்கொண்ட நிலையில், சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக்கட்டணம் என அடுத்த 15 நாட்களில் வரிகளை அடுத்தடுத்து உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பதிவுசான்றிதழ், தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.