சென்னை: போக்குவரத்துத்துறையில் 2023ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை கொடுக்க ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கிடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழக போக்குவரத்துறையின் கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல ஆயிரம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையான பணப்பலன் , ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு வருவதும் வாடிக்கையாக உள்ளது.
, “போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்த திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டாத நிலையில், பல முறை போராட்டம் நடத்தியுள்ளது. இதனால் அவ்வப்போது சிறுக சிறுக பணப்பலன்களை விடுவித்து வருகிற்து. இதற்கிடையில், கடந்த இரு வருடங்களில், பணி ஓய்வு பெற்ற 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.3,500 கோடி பணப்பலன் நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக 93,000 போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. ஊதிய ஒப்பந்தமும் பேசி முடிக்கப்படவில்லை”. என்று போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை வரும்போது போக்குவரத்து தொழிலாளர்களின் தேவை அதிகரிப்பதால் அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதாக நாடகமாடுகின்ற அரசாங்கங்கள் அந்த வேலை முடிந்தவுடன் போக்குவரத்து மூலம் கிடைத்த லாபத்தை பொதுவெளியில் அறிவிக்கிறார்களே ஒழிய அதனை ஈட்டி கொடுத்த தொழிலாளர்களின் உழைப்பு பற்றி பேசுவதே இல்லை என்று தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு முதற்கட்டமாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.