சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் கடந்த 30ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், பேரறிவாளன், கடந்த ஒரு வருடமாக பரோலில் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. அதுபோல, நளினியும் கடந்த 5 மாதமாக பரோலில் இருந்து வரும் நிலையில், இன்று 6வது மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நளினிக்கு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதன்முதலாக திமுக அரசு பரோல் வழங்கியது. அப்போது,  தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அனுமதி கோரி பரோல் பெற்றார். தற்போது,  நளினி காட்பாடி அருகே உள்ள பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவருக்கு வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நளினியின் பரோல் இன்று 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டடுள்ளது.  இதற்கான அறிவிப்பை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.