சென்னை: தமிழக அரசு கேட்ட ரூ.6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ.352 கோடி மட்டுமே மோடி அரசு வழங்கி இருப்பதாக சட்டப்பேரவையில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதங்களைத் தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், மழை, வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி நிதியில் மத்திய அரசு இதுவரை வெறும் 352 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்தியஅரசு நிவாரண நிதி வழங்குவது வாடிக்கையானது. இதில் மாநில அரசு கேட்கும் நிதியில் குறைந்த பட்சம் பாதியாவது கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் எற்பட்ட இயற்கை சீற்ற பாதிப்புக்கு மத்தியஅரசு மிகக்குறைந்த அளவிலான நிதியையே வழங்கி உள்ளது.
இது கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசுக்கு ரூ.6230 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.352 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்து உள்ளது. இது தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 5.66 சதவீதம் என்று தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதல்கட்டமாக 549 கோடியே 63 லட்ச ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 2 ஆயிரத்து 79 கோடியே 86 லட்ச ரூபாயும் என மொத்தம் 2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்ச ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அப்படியிருந்தும், கேட்ட நிதியைவிட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.