சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த விருதினை சுதந்திரத் தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அட்சியை பிடித்த திமுக பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறது. அதன்படி, தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழக முதல்வர் தலைமையில் தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் “தகைசால் தமிழர்” விருது பெறும் விருதாளருக்குப் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மறைந்த கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா, மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆகஸ்டு 15ந்தேதி நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது குமரி ஆனந்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார்.