திருச்சி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டுகால குத்தகை முடிவடைந்த நிலையில் , அந்த ஓட்டலை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி உள்ளது.
இந்த ஓட்டலை நடத்தி வந்த நிறுவனமானது, பிரபல எஸ்ஆர்எம் பல்லைக்கழகம், மருத்துவமனை, புதிய தலைமுறை டிவி சேனல் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எனப்படும், பச்சமுத்து என்பவருக்கு சொந்தமானது.
இந்த நிறுவனம், ரூ.38 கோடி குத்தகை பாக்கி செலுத்தாத நிலையில், ஓட்டலை தமிழ்நாடு அரசு கைப்பற்றி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

திருச்சி மாநகரம் அண்ணா கலையரங்கம், கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம். ஓட்டல் . 4.70 ஏக்கர் பரப்பளவில் இந்த ஓட்டல் அமைந்துள்ள அந்த இடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தை கடந்த 1994ம் ஆண்டு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகால குத்தகை தொகையாக ரூ.47.93 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளில் அந்த நிறுவனம் ரூ.9.08 கோடி மட்டுமே செலுத்தியது. மீதமுள்ள ரூ.38.85 கோடி தொகையை செலுத்தாமல் ஓட்டல் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஓட்டலுக்கு வழங்கப்பட்ட 30ஆண்டு கால குத்தகையும், 2024ம் ஆண்டு ஜூன் 13ம்தேதியுடன் முடிவடைந்தது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஓட்டலை கையகப்படுத்த வந்த போது, எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தினரும், ஐ.ஜே.கே. கட்சியினரும் வாக்குவாதம் செய்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம் நிர்வாகத் திற்கு காலக்கெடு விதித்தது.
நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைடுத்து அங்கு வந்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அதிகாரி வெங்கடேசன், திருச்சி மண்டல மேலாளர் பிரபுதாஸ் தலைமையில் அதிகாரிகள், திரு8ச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை நேற்று கையகப்படுத்தினர்.
இதையடுத்து, உடனடியாக ஓட்டலுக்கு மேலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு சுற்றுலா துறையை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஓட்டலின் முன் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் தங்களின் லோகோவை ஒட்டினர்.
இந்த நடவடிக்கையின்போது, ஓட்டலில் தங்கி உள்ள விருந்தினர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஓட்டல் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், . அலுவல் ரீதியாக முழுமையாக ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாதபடி தொடர்ச்சியாக அவர்களை பணியில் ஈடுபட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தின் சார்பில் கால அவகாசம் கேட்டு அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உத்தரவு எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு ஆதரவாக வரும்பட்சத்தில் மீண்டும் ஓட்டல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
குத்தகை நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் எஸ்ஆர்எம் ஓட்டலை அரசு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.