சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு (Tamil Nadu Electricity Regulatory Commission = TNERC) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-ன் கீழ் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இயங்கி வந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என 01.11.2010 அன்று சீரமைக்கப்பட்டுள்ளது.
பின்னர், மின்சாரச் சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் அங்கீரிக்கப்பட்டது.
இவ்வாணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் C.T.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
தேர்வுக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் 16.09.2024 அன்று மாலை 6.00 மணி வரை வரவேற்கப்பட்டது. ஆனால் போதிய அளவுக்கு விண்ணப்பம் வராததால், அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, தேர்வுக் குழுவின் முடிவிற்கிணங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற் கான கால வரம்பினை 04.10.2024 மாலை 6.00 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த விவரங்கள் இணையதள முகவரி https://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளது.