சென்னை: சூரியசக்தி உற்பத்திக்கான கூரைகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு தமிர்நாடு மின்சார ன்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அந்நிறுவனங்கள் மின்வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது.
மாநிலங்களில் மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், சூரிய சக்தி மின்சாரத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.அதற்காக மோடி அரசு, பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி, இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை (சோலார் பேனல்) அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். இரண்டு முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் ஆகும்.
ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும். இரண்டு கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60,000மும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் அலகுக்கு ரூ.78,000மும் மானியம் வழங்கப்படும்.
அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் காரணமாக பொதுமக்கள் சூரியசக்தி மின்உற்பத்தி செய்யும் மேற்கூரைகள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீப காலங்களில் பொதுமக்கள் சூரிய சக்தி மின்உற்பத்தியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுபோல ஏராளமான நறுவனங்களும் இதில் இறங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால், அதிக பேர் சோலார் பேனல் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை, தங்களது நிறுவனம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
எனினும், பலருக்கு எந்த நிறுவனம் மூலமாக, சூரியசக்தி கூரைகள் அமைப்பது என்பது தெரியவில்லை. அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களும் கிடைப்ப தில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி உற்பத்திக்கான கூரைகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலமாக, வீடுகளில் சூரியசக்தி உற்பத்திக்கான மேற்கூரை அமைக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் எளிதாக கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைப்பதற்கு ஏற்ற வகையிலான கூரை கொண்ட சொந்த வீடு இருக்கவேண்டும். அந்த வீட்டிற்கு மின்சார இணைப்பு கட்டாயம் இருக்கவேண்டும். வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் சூரிய சக்தி மின்சாரத்திற்காக மானியம் பெறுபவராக இருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் எவ்வாறு சேர்வது?
இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுடையவர்கள் www.pmsuryaghar.gov.in. என்ற தேசிய தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மின்சார விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் மாநிலத்தை அதில் குறிப்பிட வேண்டும். இந்தத் தளத்தில், திட்டத்தில் சேர்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும். மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களையோ அல்லது தனிநபர்களையோ நுகர்வோர் தேர்வு செய்து கொள்ளலாம்.
மின் நுகர்வோர் கடன் வசதி பெறமுடியுமா?
மின்சார நுகர்வோர் சோலார் மின் அமைப்புகளை நிறுவுவதற்கு கடன் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. 3 கிலோ வாட் அமைப்புகளை நிறுவ 7 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்ததிற்கு ஏற்ப கடன் விகிதம் மாறுபடும். உதாரணத்திற்கு தற்போதைய 6.5% என்ற ரெப்போ வட்டி விகிதம், 5.5 % மாக குறைந்தால், இந்தத் திட்டத்தின் 7% வட்டி என்பது 6% மாக குறையும்.
மானியம் பெறுவதற்கான வழிமுறை என்ன?
மானியத்தை பெறுவதற்கு முதலில் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
இதனையடுத்து மின் இணைப்பு எண் மற்றும் செல்பேசி எண்ணை லாக் இன் செய்ய வேண்டும். படிவத்தின் அடிப்படையில் மேற்கூரை சூரிய சக்தி இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய அனுமதி பெற்றபின், பதிவு செய்துள்ள விற்பனையாளர் மூலம் சூரிய சக்தி தகடுகளை வீட்டின் மேற் கூரையில் நிறுவலாம். சூரிய சக்தி அளவு நிறுவப்பட்ட பின்பு அதன் விவரங்களைத் தெரிவித்து மீட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மின் விநியோக நிறுவனம், மீட்டரைப் பொருத்திய பின்பு அமைப்புச் சான்றிதழை இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நுகர்வோர் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை கேன்சல் செய்யப்பட்ட காசோலை மூலம் தளத்தில் தெரிவிக்கலாம். அடுத்த 30 நாட்களுக்குள் உங்களுக்கான மானியம் உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் வீடுகள் ஏன் சேர்க்கப்படுகின்றன?
மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பதற்காகவே இந்தத் திட்டத்தில் வீடுகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் உபரியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கானத் தொகையை மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து பெற்று கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம், 3 கிலோ வாட் சூரிய மின் சக்தி அலகை நிறுவி, மாதத்தில் 300 யூனிட் மின்சாரத்தை நுகரும் வீட்டுக்கு ஓராண்டில் தோராயமாக ரூ. 15 ஆயிரம் சேமிப்பை உத்தரவாதப்படுத்துகிறது. இத்தகையை வீடுகள் தங்களது சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்து, சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 1875 வரை சேமிக்கலாம்.
சோலார் அலகை நிறுவுவதற்கு பெறும் கடனுக்கான மாதாந்திர தவணையாக ரூ. 610 செலுத்தியப் பின்னர், மாதத்திற்கு ரூ. 1265 வீதம் தோராயமாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் மிச்சப்படுத்தலாம். கடன் பெறாத வீடுகளின் சேமிப்பு மேலும் அதிகமாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம், பசுமைப் பூமி என்னும் லட்சியத்திற்கான பங்களிப்பை வழங்கும் வாய்ப்பும் கிட்டும்.