சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  அறிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் ஆளுநர் மாளிகை, மாநிலஅரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய  நபர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வாடிக்கையாக நடைபெறும். மாநில ஆளுநருக்கும், மாநில அமைச்சரவைக்கும் இடையே நல்லுறவு நிலவும் வகையில் இந்த விருந்து ஏற்பாடுகள்  நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில், ஆளுநருக்கும், மாநில திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருவதால்,  இந்த விருந்தில் கலந்துகொள்வது குறித்து, கடைசி நேரத்தில் மட்டும்தான் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள்,  சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,

முத்தமிழறிஞர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.