சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ‘இரட்டை வேடம்’ போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 100ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்ப தயங்குவது காங்கிரஸ் கட்சிக்கே தலைகுனிவு என விமர்சிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற கொலை சம்பவங்கள் மாநில மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியுள்ளன. இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை, திமுக அரசை விமர்சித்து அறிக்கைவெளியிட்ட நிலையில், சிறிது நேரத்தில் பழைய அறிக்கையை தவிர்த்து மென்மையான கண்டனத்துன் புதிய அறிக்கை வெளியிட்டார்.
“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என கூறிய செல்வபெருந்தை, சிறிது நேரத்தில் பல்டி அடித்த விவகாரம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் செல்வபெருந்தகை குறித்து பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
நேற்று காலை பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்துஒருவர் தஞ்சை ஆசிரியை கொலை சம்பவம் பேசும்பொருளான நிலையில், இதுகுறித்து காங்கிரஸின் செல்வப்பெருந்தகை அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், “தஞ்சையில், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியையாக பணியாற்றிய ரமணி பள்ளியில் இளைஞர் மதன் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கொலைவெறி சம்பவம் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சில நாட்களுக்கு முன்பாக கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை புற்றுநோய் பிரிவில், சிகிச்சை பெற்று வந்தவரின் மகன் விக்னேஷ், மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். மீண்டும் இதுபோன்ற கொடிய சம்பவம் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளே நடந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
இதுபோன்ற சம்பவங்களில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுமே யானால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதோ என அச்சம் பொதுமக்கள் மத்தியில் தலைதூக்குவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே தீவிரமாக நடவடிக்கைளை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், சிறிது நேரத்தில், அந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என அறிவித்துவிட்டு மாற்று அறிக்கை வெளியிட்டார்.
அதில், இதுபோன்ற சம்பவங்களில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மென்மையாக கண்டித்ததுடன், சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டதோ என்ற வார்த்தை முழுமையாக அகற்றிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் இந்த அறிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் நடைபெறும் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில் ஒரு கட்சியின் மாநில தலைவருக்கு என்ன தயக்கம், என்ன பயம், இதுபோன்ற விணயத்தில், ஏன் இரட்டை வேடம் போட வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், இன்று வந்த சிறிய கட்சிகளே அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், 100ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் பேரியங்கம், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒரு கட்சியின் தலைவரே அரசை விமர்சிக்க பயந்தால், காங்கிரஸ் கட்சி எப்போதுதான் மக்களிடையே நம்பிக்கை பெறும் என கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள், இது 100ஆண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவு, வெட்கக்கேடு என்றும், ஒருவேளை செல்வபெருந்தகை தன்மீது ஏற்கனவே உள்ள வழக்குகளால், ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்தில், அரசை விமர்சிக்க பயப்படுகிறார்போலும், என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
மத்திய மோடி அரசையே காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள், ராகுல்காந்தி, பிரியங்கா என பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சிக்கக்கூட ஒரு தேசிய கட்சியின் தலைவர் தயங்குவது ஏனோ….?
செல்வபெருந்தகை மீதான வழக்குகள் விவரம்:
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு – முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக செல்வப்பெருந்தகை பெயர் இடம்பெற்றுள்ளது.
2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி
2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்
2003வழக்கு எண் 451/2003 இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில் ஏற்கனவே செல்வபெருந்தகை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டுள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே வழக்குகள் விவரத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.