சென்னை : சமீபத்தில் பாரிசில் நடைபெற்று முடிந்த பாரலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இனறு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு பதங்களை பெற்ற, சேலம் மாவட்டம் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில், தலா ரூ.5 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க கவுரவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மணிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வழங்கினார்” அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.