சென்னை:
மேகதாது அணை கட்டும் கர்நாடக மாநில அரசின் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என கர்நாடகாவை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் வகையில் திட்ட அறிக்கைக்கு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக கர்நாடக அரசு அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்றும், தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.