சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லங்கள் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்ககல் நாட்டினார்.
தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் . ரூ.62.51 கோடி மதிப்பீட்டில் 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணி, ரூ.27.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, , இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 62 கோடி 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிகள், கோயம்புத்தூர் – “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு 27.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி. சென்னை, இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.
பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் “தோழி விடுதிகள்” பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிற நகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்” தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் தங்கும் பெண்களின் தேவைகளுக்கேற்ற பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தோழி விடுதிகளின் அமைவிடம், வசதிகள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களையும், முன்பதிவு செய்வதற்கான வசதியையும் www.thozhi.in என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம். தமிழ்நாட்டில் இதுவரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் 19 தோழி விடுதிகள் நிறுவப்பட்டு, 1,824 பணிபுரியும் மகளிர் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில், 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 புதிய ‘தோழி’ விடுதிகளுக்கு முதலமைச்சர் அவர்களால் 21.05.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்விடுதிகள் 2,000 பணிபுரியும் பெண்கள் தங்கி பயன்பெறும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் அதன் தொடர்ச்சியாக, பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கூடுதலாக திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மொத்தம் 62 கோடி 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் அமைக்கப்படவுள்ள 12 புதிய தோழி விடுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் 27 புதிய தோழி விடுதிகள், கூடுதலாக 2,790 மகளிர் பயன்பெரும் வகையில் வரும் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
இத்தோழி விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24×7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பொழுதுபோக்கு அறை, குளிரூட்டப்பட்ட அறை, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடன் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிரின் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது, பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற குறுகிய காலங்களுக்கு நகரங்களுக்கு வரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டுதல் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லங்களில், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் சிறார்கள் தங்கவைத்து பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இங்கு சிறார்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்றவை வழங்கப்படுவதுடன், இச்சிறார்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் ஆற்றுப்படுத்துதல், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அடிப்படை திறன் வளர்ப்புப் பயிற்சிகள் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த இல்லங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் “பூஞ்சோலை” என்ற பெயரில் அமையவுள்ள அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லத்திற்கு 16 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், திருச்சிராப்பள்ளி, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு 10 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.
இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தல் சென்னை, இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு தற்போது 14,876 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் முதல் தளம் கொண்ட புதிய கட்டடம் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்கள்.
இந்த இல்லத்தில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 70 சிறுவர்கள் தங்கி பயன்பெறும் வகையில் சிறுவர்கள் தங்கும் அறைகள், வகுப்பறைகள். நூலக அறை, திறன் பயிற்சி அறை, மருத்துவ அறை, சமையலறை, உணவுக்கூடம், உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.