சென்னை; இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில  பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்துக் கூறி உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவராக நாராயணன் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். வரும் (ஜன.) 14ம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நாராயணனுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோ-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த – தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமாலை  வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,

இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட நாராயணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் புகழ்பெற்ற விஞ்ஞானி. இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

சந்திரனின் தென்துருவ பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுத் தந்த இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு  கூறி உள்ளார்.