சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று தமிழகஅமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20 -ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24 -ம் தேதிவரை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யும் வகையில் இந்த மாதம் இறுதியில் சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனால், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டத்துக்கான செலவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 18 தொழில் நிறுவனங்களுக்கு விரிவாக்கம், முதலீடு, சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர்.