சென்னை: 2024-25 நிதியாண்டில் வருவாய் ரூ.1,95,173 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில், மாநில வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடி ஆக இருக்கும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பங்கு வரி வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. பேரிடர் நிவாரண நிதி, கல்வி நிதியை மத்தியஅரசு மறுப்பதால் மாநில அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் கொண்டுள்ள நாம் வரியை அளிப்பதில் 9 சதவீதமாக உள்ளோம். மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது என கூறிய நிதி அமைச்சர்,
2025-26-ம் நிதியாண்டுக்கு 2.20 லட்சம் கோடி ரூபாயாக வரி வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
2025-26-ம் நிதியாண்டில் மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ள நிதியமைச்சர், அரசின் பெரும் முயற்சியால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-25 நிதியாண்டில் வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1,95,173 கோடி என்பதை சுட்டிக்காட்டியவர், வரும் நிதியாண்டில், அது 2.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும் என்று கூறியவர், வரும் மூலதன பணிகளுக்காக ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும், வரியல்லாத வருவாய் ரூ.28,219 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.