சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில், ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
முன்னதாக, ‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து ஆற்றிய உரையில், “இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது
100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியதுடன், நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என பெருமிதத்துடன் கூறினார்.
வரும் ஜூன் மாதத்திற்குள் 10ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் வானிலையை கண்காணிக்க புதிய 2 டாப்ளர் ரேடார்கள் வாங்கப்படும்.
மீனவர்களின் மீன்பிடி தடை மானியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்படும்.
இலங்கைத் தமிழர் நலனுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த 1,291 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; விரைவில் 2ம் கட்ட பணிகளும் முடிக்கப்படும்.
வேளாண்மை, சிறு குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; கடந்த ஆண்டை விட 14% அதிகம்.
சுற்றுலா வளர்ச்சிக் குழுமங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்படும்.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்துள்ளது; தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு இணைய வசதிகளை செயல்படுத்த ரூ.3,206 கோடி ஒதுக்கீடு.
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,429 கோடி ஒதுக்கீடு.
ரூ.100 கோடி மதிப்பில் 120 சமூகநலக்கூடங்கள் கட்டப்படும்.
நகர்ப்புற பகுதிகள், ஊரகப்பகுதிகள், ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு.
கல்லணை கால்வாயை நீட்டித்தல் மற்றும் புனரமைப்பதற்கு ரூ.400 கோடி மதிப்பில் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு.
பல்லுயிர்களை பாதுகாக்க முதற்கட்டமாக 5 கோடி ஒதுக்கீடு; செங்கல்பட்டில் 137 ஹெக்டேர் பரப்பளவில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.