சென்னை; கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 31ந்தேதி கோவை செல்வதாக தெரிவித்து உள்ளார்.

கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத அமைப்பின் செயல் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக,  தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது, இதையடுத்து பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜமீஷா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயார் செய்வதற்கான பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் வயர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களும், ஜிகாத் கொள்கைகள் தொடர்பான புத்தகங்களும் மற்றும்  109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த முபினுடன் சேர்ந்து மேலும் 16பேர் பயங்கரவாத பயிற்சி பெற வெளிநாடு செல்ல இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (31ந்தேதி) கோவை செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால.  பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31 ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் 31ந்தேதி மாவட்ட பாஜக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டு, அது வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலையின் கோவை பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக சார்பில் கோவையில் அறிவிக்கப்பட்ட ‘பந்த்’ தற்காலிகமாக ஒத்திவைப்பு!