சென்னை மத்திய அரசின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
மத்திய அரசின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது , “வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழும் நாடு நமது இந்திய நாடு. பல்வேறு மதம், இனம் மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் இருப்பினும், அனைவரும் சமம் என்ற உண்மை உணர்வோடு மக்கள் அனைவரும் வாழந்து வருகிறார்கள். இத்தகைய நாட்டை ஆளும் அரசும், இத்தகைய உணர்வு கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால், மத்தியில், ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி அரசானது, அனைத்து செயல்களையும் உள்நோக்கத்துடன் செய்து வருகிறது. எதை செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் திட்டங்களை தீட்டுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது, சிறுபான்மயைினரான இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது. அதுபோல வக்பு சட்ட திருத்தம் கொண்டு வந்த இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கிறது என கூறினார்.
தீர்மானம்:
இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சிறுபான்மையினரின் நலத்தினையும் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால் இந்த நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மை யின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தினைத் திருத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதைத்தொடர்ந்து, இந்த தீர்மானத்தின்மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த தீர்மானத்தை வரவேற்று அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் சார்பில் அசன் மௌலானா, பாமக சார்பில் ஜி.கே.மணி, விசிக சார்பில் ஆளூர் ஷா நவாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் உறுப்பினர் ஜெகன்மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர்.
அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய பாஜக அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக சார்பில் ஆதரிக்கிறோம். வக்பு வாரியத்தின் அடிப்படையை தகர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளது. வக்பு வாரிய சொத்துகளை இஸ்லாமியர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெறும் கட்சியாக உள்ளது பாஜக என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிக் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத ரீதியாக நாட்டை பிரிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு என அவர் கூறினார். மேலும், வக்பு வாரிய சட்டத்திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு மூலம், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.