சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும்  தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கக்கோரி திமுக மனு கொடுத்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சியினர்,  பல்வேறு அமைப்பினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசு உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்து உள்ளன. இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில்  முதல்வர் பினராயி விஜயன்  சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டில் முதல் கூட்டம்  வரும் 6ந்தேதி தொடங்க உள்ள நிலையில்,  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசனிடம்  மனு அளித்துள்ளனர்.