டில்லி:

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி.,க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களும்  நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீதிநீர் விவகாரத்த்தில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.  அதில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணை பிறப்பித்ததுடன், தமிழக மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் பலனில்லை.  இடையில் மத்திய நீர்வளத்துறை சார்பாக இது குறித்து கூட்டம் நடத்தப்பட்டதோடு சரி.

கடந்த சில நாட்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி,க்கள் போராட்டம் நடத்தினர். இந்த  இன்று மீண்டும் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகள் தாங்கியபடி அதிமுக எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போல ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி  தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.,க்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதிமுக மற்றும் தெலுங்கு தேச கட்சி எம்.பி.,க்களின் போராட்டத்தால்  ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.