சென்னை: தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மார்ச் 7, 2025 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் புதிதாகப் பெயரிடப்பட்ட ராஜாதித்ய சோழர் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற CISF தினத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீப காலம் வரை மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) தேர்வுகளை நடத்துவதில் தாய்மொழிக்கு இடமில்லை. ஆனால், பிரதமர் மோடியின் முடிவுன்படி, [அரசியலமைப்பின்] எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனால், இப்போது, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் கூட தமிழில் தேர்வை எழுதலாம்,” என்று அவர் கூறினார்.
மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை விரைவில் தமிழ் வழியில் வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்க வேண்டுகோள் விடுத்தார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இதைக் கேட்டு வருகிறேன், ஆனால் எந்தப் பலனும் இல்லை. இன்று அவர் நிச்சயமாக ஏதாவது செய்வார் என்று நம்புகிறேன்,” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன, விரைவில் மருத்துவப் பாடம் தமிழில் கொண்டு வரப்படும் என்றார். இதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேலும், தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார்.