சென்னை: இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம், திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்தி படங்களை தமிழ்நாட்டில் விநியோகிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது மத்தியஅரசை கடுமையாக சாடியதுடன், டெல்லி சென்று போராட்டம் நடத்துவோம் என்றார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  இந்தி திணிப்பு என்பது பொய்;  எதை வைத்து இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது திமுகவின் கபட நாடகம் என்று கூறினார். இந்தி திணிப்பு என்பதற்கான ஆதாரம் உள்ளதா?  என்பது குறித்து முதல் அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தியதுடன், திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார்கள் என்றவர், மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை.புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை கடைபிடிப்பதாகத்தான் கூறப்படுடள்ளது. இந்திக்கு எதிரான பேசும் திமுக அரசு, இதுவரை,  அரசு பள்ளிகளில் தமிழ் கூட கட்டாய மொழியாக மாற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை என்று விமர்சித்தார்.

இந்தி மொழிக்கு எதிராக போராட்டம் நடத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி படத்தை விற்பனை செய்வதற்காக, இந்தி நடிகைகளை தமிழ்நாட்டில் கொண்டு வருகிறார். அவர் ஏன் இந்தி பட விநியோகம்  செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள  திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களை மிரட்டி வாங்கி வைத்து, இந்தி படத்தை தான் பார்க்க வேண்டும்  என தமிழக மக்களிடைம் இந்தியை திணிப்பது உதயநிதி ஸ்டாலின்தான் என்றவர், இன்னும் கொஞ்ச நாட்களில் அனைத்து இந்தி படத்தின் உரிமைகளும் உதயநிதி ஸ்டாலின்தான் வாங்குவார்.

தமிழ், தமிழ் என்று கட்சியை தொடங்கியவர்கள், இந்திக்கு எதிரான போராட்டம் நடத்துபவர்கள்,  எதற்காக இந்தி படத்தின் விநியோகத்தை மிரட்டி வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக தனது பொய்யான வாதங்களை  கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்தியஅரசு மாணவர்கள், தங்களுக்கு பிடித்த மொழியை மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றுதான் தெரிவித்து உள்ளது. இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஆனால்,  தமிழகத்தில் மட்டும், திமுக அரசு, மத்தியஅரசுக்கு எதிரான மனநிலையில், புதிதாக  மாநில கொள்கையை உருவாக்கிக் கொள்கிறோம் என்று கிளம்பியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், இந்தியை எங்கேயும் திணிக்கவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடியே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரே அரசியல் காரணங்களுக்காக இந்தியை மெதுவாகதான் கற்றுக்கொண்டார்.

இவ்வாறு கூறினார்.