சென்னை: ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் தமிழே இல்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ள நிலையில், அந்த பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கனிமொழி:
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் நியமனம் குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட நிரந்தரமாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது” என்று கூறியுள்ளார்.
வானதி சீனிவாசன்:
கனிமொழியின் பதிவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு அளித்துள்ளதாக” திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசில் 15 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தபோதும் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தன. அப்போது, தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை? அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி இதை கேட்டிருக்கலாமே?
மத்திய அமைச்சர் பதவிக்காக, பசையான துறைகளுக்காக சோனியா காந்தியிடம் சண்டை போட்ட திமுக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க சண்டை போட்டிருக்கலாமே?
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறும் கனிமொழி, இந்தப் பள்ளிகளில் எப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்? தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர்? என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா? 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு அமையும் முன்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. மோடி அவர்கள் பிரதமரான பிறகுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான். இந்த உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்தபிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும். அப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என குறிப்பிட்டுள்ளார்.