சென்னை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆன்லைனில் புக் செய்யப்படும் திரைப்பட டிக்கட்டுகளின் விலையை ரூ.10லிருந்து ரூ. 30 வரை குறைக்க முயற்சி எடுத்து வருகிறது.
திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டபின் டிக்கட் விலைக்கு மேல் ஜிஎஸ்டி வரியை சேர்த்து கட்டணமாக வசூலித்து வருகின்றனர். இது அரசு ஆணையான குறைந்தபட்ச டிக்கட் விலை ரூ.10, அதிகபட்ச டிக்கட் விலை ரூ.120 என்பதற்கு எதிராக இருந்தாலும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இதனால் திரையரங்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் டிக்கட் விலையை குறைத்தால்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என கருதுகிறது. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் ஆன்லைனில் புக் செய்யப்படும் டிக்கட்டுகளின் விலையை ரூ.10லிருந்து ரூ.30 வரை குறைக்க முயற்சி செய்து வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் டிக்கட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள இந்நிலையில் இது போல விலைக்குறைப்பினால் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் உள்ள மொத்த இருக்கைகள் எவ்வளவு என்பதும், டிக்கட் எவ்வளவு விற்பனை ஆகின்றன என்பதும் தயாரிப்பாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவதில்லை எனவும் கூறியுள்ளார்.
விஷாலின் கருத்தான டிக்கட் விலைக் குறைப்பை பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், “ரூ. 10 லிருந்து ரூ. 30வரை டிக்கட் விலைக் குறைப்பு என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. ஆன்லைன் டிரான்சாக்ஷன் சார்ஜே ரூ. 10 ஆகிறது. ஒவ்வொரு தியேட்டரிலும் ஆன்லைன் மூலம் ரிசர்வ் செய்ய டிக்கட் ஒன்றுக்கு ரூ.15 செலவழிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பல தனியார் இணையதளங்கள் ஆன்லைன் டிக்கட் ரிசர்வேஷன் செய்யும் போது, அவர்களின் சேவையை எங்களால் புறக்கணிக்க முடியாது “ எனக் கூறினார்.
மேலும், திரையரங்குகளில் உள்ள மொத்த இருக்கைகள், மற்றும் டிக்கட் விற்பனை விவரங்களும் வெளிப்படையான ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
எது எப்படியோ, டிக்கட் விலை குறைந்தால் திரைப்பட ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி