சென்னை: திரையுலகம் சார்பில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “விரைவில் ஆட்சியமைக்கப் போகும் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுக வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், தலைவர் கலைஞர் கலந்துகொள்ளும் முதல் பாராட்டு விழா திரையுலகினரின் பாராட்டு விழாவாகத்தான் இருக்கும். ஏனென்றால், திரையுலகை எப்போதுமே தனது தாய் வீடு என்பார்.
இந்த முறையும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்ஸி என அனைத்தும் இணைந்து புதிய அரசுக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். இந்த கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய பாராட்டு விழாவில்தான் கலந்து கொள்வார் என்று நம்புகிறோம்.
தலைவர் கலைஞர் இருக்கும்போது, திரைத்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் செய்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக வரியைக் குறைத்தது கலைஞரின் ஆட்சியில்தான். ஒவ்வொரு முறை ஆட்சியிலும் திரைத்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் கொடுத்துக் கொண்டுதான் வந்தார். படத்துக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி கிடையாது என்பதை கலைஞர்தான் அறிவித்தார். அதற்கு எப்போதுமே நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது தமிழ்த் திரையுலகம்தான். திரையரங்குகள் சுமார் ஓராண்டாக மூடியே வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் சொத்து வரி, தொழில் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றைப் பல மாநிலங்களில் தள்ளுபடி செய்துள்ளார்கள். அதேபோல் தமிழகத்திலும் தள்ளுபடி செய்தால் ரொம்ப நன்றியுடையவர்களாக இருப்போம்.
8% உள்ளாட்சி வரி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இதை நீக்குவதற்குக் கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்த வரியை நீக்கிவிட்டால் டிக்கெட் கட்டணம் குறையும்”.
இவ்வாறுஅவர் கூறினார்.